சொக்கப்பன் சீ
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு என்றாலே அது ஓட்டல்கள், உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், பேக்கரிகள், மற்றும் உணவு அமைப்புகள் போன்ற வணிக நிறுவனங்களின் பொறுப்பு என்ற பார்வையே நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஆனால், அந்த அணுகுமுறை பிரச்சினையின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது, என்கிறார் ஈரோடு மண்டல ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், ஜி.எஸ். வேலுமணி.
“வணிக ரீதியில் இயங்கும் உணவு நிறுவனங்கள் ஆய்வுகள், உரிமங்கள், தணிக்கைகள் மற்றும் பல்வேறு ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றன. ஆனால் உணவு தயாரித்தல், சேமித்தல் மற்றும் உட்கொள்ளுதல் ஆகியவற்றின் பெரும்பகுதி வீடுகளில்தான் நடைபெறுகிறது. அங்கு உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவில் இல்லை,” என்பது அவரது கவலை.

“உணவுப் பாதுகாப்பு என்பது அன்றாட குடும்ப வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறாத வரை, பொது சுகாதாரத்தை முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கம் எட்டப்படாது,” என்கிறார் வேலுமணி. உணவுப் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் அணுகுமுறையே மாற்றம் காண வேண்டிய அவசியம் இருப்பதாக கிச்சன் ஹெரால்ட் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் வலியுறுத்துகிறார். “உணவகங்களின் சமையலறைகளைத் தாண்டி, வீடுகள், பள்ளிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் வரை இந்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டும்,” என அவர் கூறுகிறார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய மதிப்பீடுகளின்படி, பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 86.6 கோடி பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. மாசுபட்ட உணவுகளால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் பிரிவினராக உள்ளனர்.
உணவக வாசலோடு முடியாத உணவுப் பாதுகாப்பு
இன்றைய விருந்தோம்பல் துறை மிகுந்த கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. ஓட்டல்கள், உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் பொட்டல உணவு தயாரிப்பாளர்கள் ஆகியோர் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், உணவு வீட்டுக்குள் நுழைந்தவுடன் அனைத்து அபாயங்களும் மறைந்து விடுவதில்லை என்கிறார் வேலுமணி. “உணவுப் பாதுகாப்பு என்பது உணவகங்களுக்கான கட்டுப்பாடு மட்டுமாக இருக்கக் கூடாது; குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அது குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும். ஏனெனில், உணவு கையாளப்படும் எந்த இடத்திலும் சுகாதார அபாயங்கள் உருவாகலாம்,” என்கிறார் அவர்.
குளிர்சாதனப் பெட்டியில் உணவை முறையாகச் சேமிக்காதது, தேவையான வெப்பநிலையில் சமைக்காதது, உறையவைத்த உணவுகளை தவறான முறையில் உருகவிடுவது, சமைக்காத மற்றும் சமைத்த உணவுகளை ஒன்றாக வைப்பது போன்ற சிறிய அலட்சியங்கள்கூட உணவால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
அன்றாட வாழ்க்கையில் எளிய நடைமுறைகள்
உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகளை அடிப்படை விழிப்புணர்வின் மூலமே தவிர்க்க முடியும், என்கிறார் வேலுமணி. இவற்றில் உணவுப் பொருட்களை சரியான வெப்பநிலையில் சேமித்தல், சைவ மற்றும் அசைவ உணவுப் பொருட்களை தனித்தனியாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்தல், இறைச்சி மற்றும் கடலுணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் ஊறவைத்தல் போன்றவை மிகவும் முக்கியமானவை. சரியாகச் சேமிக்கப்படாத பச்சை இறைச்சியிலிருந்து வெளியேறும் திரவங்கள், உடனடியாக உண்ணத் தயாராக இருக்கும் உணவுகளை மாசுபடுத்தக்கூடும். அதேபோல், அதிக நேரம் அறை வெப்பநிலையில் ஊறவைக்கப்படும் இறைச்சி மற்றும் பிற உணவுப் பொருட்களில் கிருமிகள் வேகமாக பெருகும் அபாயம் உள்ளது.
“உணவுப் பாதுகாப்பு என்பது விலையுயர்ந்த கருவிகள் அல்லது பெரிய முதலீடுகள் பற்றியது மட்டும் அல்ல. எளிய அறிவியல் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அவற்றை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதே முக்கியம்,” என்கிறார் வேலுமணி.
பெருநகரங்கள் முதல் வீதிகள் வரை விழிப்புணர்வு
உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல மாவட்ட, வட்டம் மற்றும் நகர அளவிலான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்பது வேலுமணியின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாகும். இந்த முயற்சிகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக சேமிப்பது எப்படி, காலாவதி தேதியை அறிந்து பயன்படுத்துவது எப்படி, மாசுபாட்டைத் தவிர்ப்பது எப்படி, பாதுகாப்பான சமையல் முறைகள் என்ன என்பன போன்றவற்றை மக்களுக்கு கற்றுத்தர இத்தகைய முகாம்கள் உதவும் என்று அவர் கூறுகிறார்.
மண்டபங்களும் பயிற்சி வளாகங்களாக வேண்டும்
வீடுகளைத் தாண்டி, திருமண மண்டபங்கள், சமூகக் கூடங்கள், மத நிறுவனங்கள் மற்றும் பெரிய அளவில் உணவு பரிமாறப்படும் நிகழ்வு தளங்களிலும் உணவுப் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என வேலுமணி பரிந்துரைக்கிறார்.
“ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கானோருக்கு உணவு தயாரிக்கப்படும் இடங்களில் சிறிய தவறுகள்கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, சுகாதார மேலாண்மை, உணவு சேமிப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு, தனிநபர் சுத்தம், குடிநீர் தரம், கழிவுகள் மேலாண்மை மற்றும் மாசுபாடு தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பயிற்சிகள் அவசியம்,” என அவர் கூறுகிறார்.
உணவு மாசுபாடும், நச்சுத்தன்மையும்
உணவு எவ்வாறு மாசுபடுகிறது, உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் என்ன, அவை எவ்வாறு புகாரளிக்கப்பட வேண்டும் என்பதற்கான அடிப்படை அறிவு பலரிடமும் இல்லை என்கிறார் வேலுமணி.
“இந்த அறிவின்மை பல நேரங்களில் குழப்பங்களையும், தவறான புரிதல்களையும் உருவாக்குகிறது. சில சமயங்களில், உண்மையான காரணம் கண்டறியப்படுவதற்கு முன்பே உணவகங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் குற்றம்சாட்டப்படுபடுகிறார்கள்.” இதனைத் தவிர்க்க பொதுமக்களுக்கு உணவு மாசுபாட்டின் காரணங்கள், நோய் உருவாகும் கால இடைவெளிகள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்து விளக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் உணவுப் பாதுகாப்பு
வேலுமணியின் தொலைநோக்கு பரிந்துரைகளில் மிக முக்கியமானது பள்ளிக் கல்வியில் உணவுப் பாதுகாப்பை இணைப்பதாகும்.
“தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான ஜங்க் உணவுகளின் தீமைகள் மற்றும் சமச்சீர் உணவின் அவசியம் ஆகியவை கற்பிக்கப்படலாம். உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு உணவு சுகாதாரம், உணவு மாசுபாடு, உணவுப் பொருட்களின் லேபிள் விவரங்கள், பாதுகாப்பான உணவு கையாளுதல் மற்றும் பொது சுகாதார தாக்கங்கள் குறித்து விரிவாக கற்பிக்கலாம்.” என அவர் பரிந்துரைக்கிறார்.
“உடற்கல்வி வகுப்புகள் மாணவர்களின் வாழ்வியல் பழக்கங்களை உருவாக்குவது போல, உணவுப் பாதுகாப்பு கல்வியும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் திறனாக மாற முடியும்,” என்கிறார் அவர்.
பாதுகாப்பே சமூகப் பண்பாடாக வேண்டிய நேரம்
கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், சட்டங்களும் விதிகளும் மட்டுமே அனைத்து சவால்களுக்கும் தீர்வாக இருக்க முடியாது என்பதில் நிபுணர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
உணவை வாங்குவது, சேமிப்பது, தயாரிப்பது, எடுத்துச் செல்வது மற்றும் உட்கொள்வது ஆகிய அனைத்திலும் மனிதர்களின் நடத்தையே உணவுப் பாதுகாப்பின் அடித்தளமாக உள்ளது. “வீடுகள், பள்ளிகள், குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வரை உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை கொண்டு செல்ல முடிந்தால், அது ஒரு சட்டப்பூர்வ கட்டாயமாக அல்லாமல் சமூகப் பொறுப்பாக மாறும்,” என்கிறார் வேலுமணி.
அவரது பார்வையில், உணவுப் பாதுகாப்பு என்பது இனி தொழில்துறையினரின் உரையாடலாக மட்டும் இருக்கக் கூடாது; அது ஒவ்வொரு குடும்பத்திலும் தொடங்கும் — மற்றும் செயல்படும் — மக்கள் இயக்கமாக வளர வேண்டும்.

