– எழுதியது சொக்கப்பன் ஸ்ரீநிவாசன் [மொழியாக்கம் – ஷாலினி சந்திரசேகரன் ]
இந்தியாவின் மிக முக்கிய விருந்தோம்பல் அமைப்பான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிரம்மாண்டமான தொழில்முறை கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் ‘ஹோரெகா’ (HoReCa – Hotels, Restaurants and Catering) துறையில் தமிழ்நாட்டின் தலைமைத்துவத்தைப் பறைசாற்றவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கிட்சன் ஹெரால்டு உடனான பிரத்யேக நேர்காணலில், TNHA தலைவர் எம். வெங்கடசுப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இக்கண்காட்சியின் முதல் நிகழ்வு 2026 அக்டோபர் 1-ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) நடைபெறவுள்ளது.
ஆஹார் (AAHAR) மாடலில் தமிழக அடையாளம்
டெல்லியில் நடைபெறும் புகழ்பெற்ற ‘ஆஹார்’ சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியை முன்மாதிரியாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தென்னிந்திய கவனம்: தென்னிந்திய சமையல் மரபுகள், உபகரண கண்டுபிடிப்புகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- அண்டை மாநிலங்களின் பங்கேற்பு: ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினரும் இதில் பங்கேற்பார்கள்.
- நேரடி செயல்விளக்கங்கள்: சமையல் கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்கும் நேரடி தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் அரங்குகள் இடம்பெறும்.
தற்சார்பு பொருளாதாரத்தின் அடுத்த கட்டம்
அண்மையில் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணித்து, போவண்டோ (Bovonto), கேம்பா கோலா (Campa Cola) போன்ற உள்நாட்டுப் பானங்களையும், ‘சாரோஸ்’ (Zaaroz) போன்ற உள்ளூர் டெலிவரி தளங்களையும் ஊக்குவித்த TNHA-வின் அடுத்த கட்ட நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெங்கடசுப்பு கூறுகையில், “வெளிநாட்டுப் பான நிறுவனங்கள் நம் நாட்டு நீர் ஆதாரங்களைச் சுரண்டி, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து நமக்கே விற்கின்றன. இது நமது வளங்களுக்குச் செய்யும் கேடு. இந்த ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நமது உள்நாட்டு பிராண்டுகளின் வலிமையைக் கொண்டாடும் தளமாக இந்தக் கண்காட்சி அமையும்,” என்றார்.
கொள்கை, முன்னேற்றம் மற்றும் கூட்டாண்மைக்கான ஒரு தளம்
இந்தக் கண்காட்சி வெறும் வர்த்தக நிகழ்வாக மட்டுமல்லாமல், ஜிஎஸ்டி (GST), உரிமம் பெறுதல் மற்றும் வரி விதிப்பு போன்ற துறையில் உள்ள சவால்கள் குறித்து அரசுடன் உரையாடுவதற்கான ஒரு தளமாகவும் இருக்கும்.
மேலும், இளைஞர்களிடையே நிலவும் மனப்பான்மை மாற்றம் குறித்துக் கவலை தெரிவித்த வெங்கடசுப்பு, “திறன் மேம்பாடு என்பது வெறும் பயிற்சியோடு நின்றுவிடக் கூடாது. அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய மனமாற்றமும் அவசியம். அதற்கான விழிப்புணர்வு அமர்வுகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்” என்று குறிப்பிட்டார்.
சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், அக்டோபர் 1-ஐ நிரந்தர வருடாந்திர நிகழ்வாக மாற்றி, தென்னிந்தியாவின் விருந்தோம்பல் துறைக்கான நுழைவுவாயிலாகத் தமிழ்நாட்டை பெருமைப்படுத்த தயாராகி வருகிறது.

