-ஜக்கம்பட்டி தேவராஜ்
இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழலையும், ஆண்டு முழுவதும் நிலவும் இதமான தட்பவெப்ப நிலையையும் கொண்டு, தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
பொதுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், ஏலகிரி மலையில் உள்ள ஏ.ஜி.எஸ். ஹாலிடே ரிசார்ட்டில் (AGS Holiday Resorts) நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவர் A.G.S.செந்தில் முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநிலத் தலைவர் M.வெங்கடசுப்பு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் Ananthayam Resort உரிமையாளர் A.P.நந்தகுமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், மலைவாழ் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யவும் 9 முக்கியத் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
பசுமை சுற்றுலா மற்றும் உலகத்தர உள்கட்டமைப்பு மேம்பாடு
ஏலகிரி மலையை தமிழ்நாட்டின் முதன்மை பசுமை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு சுற்றுச்சூழல் சமநிலையுடன் கூடிய நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் மலைப்பகுதிகளின் அழகை சிதைக்கும் முதன்மை காரணமான பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளை தொடக்கத்திலேயே அறிவியல் முறையில் தரம் பிரித்து, மறுசுழற்சி செய்ய அதிநவீன ‘Material Recovery Facility’ (MRF) மையத்தை நிறுவ வேண்டும். மேலும், கழிவுகளை உடனுக்குடன் கையாளவும், மறுசுழற்சி செய்யவும் நவீன கழிவு மேலாண்மை இயந்திரங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஓட்டல்கள் சங்க மாவட்ட தலைவர் திரு.A.செந்தில்முருகன் அவர்கள் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்ட நகராட்சிகளில் உள்ள உணவகங்களில் கிடைக்கம் கழிவுகளை நகராட்சிகளே பெற்று அவற்றின் மூலம் மின்சாரமோ, இயற்கை எரிவாயுவோ மற்றும் இயற்கை உரங்களாகவே தயாரித்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். இதனால் நகராட்சிக்கும் வருவாய் கணிசமாக உயரும்” என்றார்.

முறையான போக்குவரத்து வசதிகள்
சமீபகாலமாக ஏலகிரி மலையின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், முறையான மற்றும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாதது சுற்றுலா வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்றுப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடங்க வேண்டும். வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில் இருந்து ஏலகிரி மலைக்குத் தினசரி அரசுப் பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட ஓட்டல்கள் சங்க மாவட்ட பொருளார் திரு.V.குமரகுரு அவர்கள் கூறுகையில், “ஏலகிரி மலைப்பகுதி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கினாலும் கூட இரவு நேரங்களில் போக்குவரத்து சேவை இல்லை. இதன் காரணமாகவே ஏலகிரி மலையின் சுற்றுலா பெருமளவில் பாதிப்பை சந்திக்கிறது” என்றார்.
ஜலகாம்பாறை – ஏலகிரி ரோப் கார் திட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சியைத் துரிதப்படுத்த, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும். பொதுப் போக்குவரத்துச் சேவையை அதிகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவில் கவரும் வகையில் ஏலகிரி மலையில் இருந்து ஜலக்கம்பாறை நீர்வீழ்ச்சி வரை ‘ரோப் கார்’ (Rope Car – வான்வழி கம்பிவடம்) வசதியை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். தற்போது ஏலகிரி மலை நிலாவூரில் இருந்து ஜலக்கம்பாறை நீர்வீழ்ச்சிக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல சுமார் 35 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த ரோப் கார் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், இவ்விரு இடங்களுக்கும் இடையேயான தூரம் வெறும் 2 கி.மீ. ஆகக் குறையும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை எழிலை ரசித்தபடியே பயணிக்கும் ஒரு வியப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும். இதுகுறித்து ஏலகிரி ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் திரு.பீட்டர் அவர்கள், “கடந்த காலங்களில் பாரா கிளைடிங் (Para Gliding) சேவை சுற்றுலா பயணிகள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகவே, ஏலகிரி மலைக்கும் அந்த சேவை வந்தால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.” என்றார்.
கேட்டரிங் கல்லூரி அமைக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு ஏலகிரி மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு நேரடியாக உதவ வேண்டும். மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் நிரந்தர வருமானத்தை உறுதி செய்ய, அவர்களுக்கு கைவினைப் பொருட்கள், இயற்கை விவசாயம், சுயதொழில் மற்றும் சிறுதொழில் சார்ந்த நிரந்தர வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். மேலும், உள்ளூர் இளைஞர்கள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் (Hospitality Industry) சிறந்து விளங்கி வேலைவாய்ப்பு பெறும் வகையில், ஏலகிரியில் ஒரு புதிய கேட்டரிங் கல்லூரி (Catering College) அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆணையம்
ஏலகிரி மலையின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மலைவாழ் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முழுமையான தொலைநோக்கு பார்வையுடன் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பசுமைச் சுற்றுலா, நவீனக் கழிவு மேலாண்மை, தடையற்ற போக்குவரத்து, ரோப் கார் போன்ற உலகத்தர உள்கட்டமைப்புகள், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கான கேட்டரிங் கல்லூரி மற்றும் நிரந்தர வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகிய இந்த நியாயமான கோரிக்கைகளைநிறைவேற்ற ஏலகிரி மலை ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆணையம் அமைத்து அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் பட்சத்தில், ஏலகிரி மலை தென்னிந்தியாவின் தலைசிறந்த ‘பசுமை மற்றும் சாகசச் சுற்றுலாத் தலமாக’ உருவெடுப்பதுடன், திருப்பத்தூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திலும் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

