– ச. ஷாலினி
சென்னை/கோவை: சுமார் 45 ஆண்டுகால பாரம்பரியமிக்க ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனம், தனது தயாரிப்புகளின் தரம் மற்றும் தூய்மை குறித்து எழுந்துள்ள வதந்திகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் இது குறித்துப் பேசுகையில், தங்களது நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படையே “சத்தியம் மற்றும் தரம்” தான் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
45 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகள் அனைத்தும் சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் 1979-ல் துவக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியத்துடன் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழகம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என, 68 கிளைகளைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 50,000 சதுர அடியில் உலகத்தரம் வாய்ந்த கிச்சன் செயல்படுகிறது. இங்கு உணவு பாதுகாப்பு துறையின் விதிகளுக்கு உட்பட்டு இனிப்புகள் தயாராகின்றன.
சுத்தமான நெய்யால் தயாரிக்கப்படும் இனிப்புகளே, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அந்த காலம் முதல் இப்போது வரை எங்கள் தொழிலில் உண்மையுடன் இருக்கிறோம் என்ற கிருஷ்ணன், பாதாம் அல்வா என்றால் பாதாம் பயன்படுத்தி தயாரிப்பது, சுத்தமான நெய் என்றால் சுத்தமான நெய் தான் பயன்படுத்துவோம். அதில் எந்த இடத்திலும், எவ்விதமான கலப்படத்துக்கு இடமில்லை, என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, இனிப்புகளின் தரமும், நாங்கள் பின்பற்றும் சத்தியமும் எந்த இடத்திலும் தவறவில்லை. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே சொத்து. அதன் மூலமே உலகம் முழுவதும் பேசப்படுகிறோம். எக்காரணம் கொண்டும், நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட மாட்டோம். தொழில் தர்மத்துக்கு விரோதமாக எப்போதும் எங்கள் தலைமுறையே எந்த செயலும் செய்யாது, என்றார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) விதிகளின்படி அனைத்து ஆய்வுகளும் நடைபெறுகின்றன. எந்த தயாரிப்பிலும் கலப்படம் இருப்பதாக ஆய்வக அறிக்கைகள் எதுவும் இல்லை என்றும், வனஸ்பதி கலந்ததாக கூறப்பட்ட தகவல்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும், எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
“தொழில் தர்மத்துடன் செயல்படுவதால் தான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறோம். தரத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட விலகியதில்லை” என்றும் கிருஷ்ணன் தெரிவித்தார்.

