-ஜக்கம்பட்டி தேவராஜ்
தமிழ்நாட்டில் உணவு விநியோகத் துறையில் அதிகரித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், ஆன்லைன் வர்த்தக அமைப்புகளின் முறையற்ற தள்ளுபடிப் போட்டி மற்றும் FSSAI விதிகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் சிறு மற்றும் நடுத்தர உணவு விநியோகஸ்தர்கள் பெரும் வணிகப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
உணவு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் என அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் சென்னையில் உள்ள தரமணி கேட்டரிங் கல்லூரி (IHM) வளாகத்தில் ஆகஸ்ட் 14 மற்றும் 15 அன்று HISWA அமைப்பின் சார்பில் மாபெரும் கண்காட்சியை நடைபெற உள்ளது. இதுகுறித்து, HISWA (Hospilatity Industry Sppliers Welfare Association) அமைப்பின் நிறுவுனரும் பாலாஜி ஃபுட்ஸ் உரிமையாளருமான திரு.J.ராமமூர்த்தி அவர்களிடம் பேசுகையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களால் உணவு விநியோகஸ்தர்கள் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், உணவு விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் அரசு தலையிட்டு நிரத்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் உணவுத்துறையும் பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சியை பெற்று வந்தாலும், உணவு விநியோகஸ்தர்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் உணவு விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் சவால்களை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
தொடர் வளர்ச்சியும், எதிர் நிற்கும் சவால்களும்
பாரம்பரிய உணவு முறைகளுடன் சிறுதானிய உணவுகள் (Millets), சைனீஸ் (Chinese), ஜப்பானீஸ் (Japanese), மற்றும் தாய் (Thai) போன்ற வெளிநாட்டு உணவு வகைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்திய காலங்களில் தரமான உணவுத் தயாரிப்புக்காக உள்நாட்டு மூலப்பொருட்கள் மட்டுமல்லாமல் தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யும் அளவிற்கு உணவு விநியோகத்துறை பல்வேறு வளர்ச்சிகளை எட்டியுள்ளது. இந்நிலையில், உணவு விநியோகத்துறை சில நடைமுறைச் சிக்கல்களையும் எதிர்கொள்கிறது.
உணவுப் பாதுகாப்புத்துறை (FSSAI) விதிகளும் நடைமுறைச் சிக்கல்களும்
பல்வேறு துறைகளின் வளர்ச்சியையும் அதன் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அரசு பல விதிமுறைகளை வகுக்கின்றது. அந்த வகையில் உணவு விநியோகஸ்தர்களுக்கும் அரசு விதிகள் (FSSAI) வகுத்துள்ளது. மேலும் அரசு சார்பில் ஒரு விதி கொண்டு வரப்படும்போது அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. உதாரணமாக, உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படும் குடோன்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மஞ்சள் கோடு வரையப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இடப்பற்றாக்குறை உள்ள சிறிய அறைகளில் இதைப் பின்பற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. இப்படியான சூழல்களில் அரசு அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும்.
மேலும் ஆன்லைன் செயலிகளில் உணவுகள் மிகவும் பிரகாசமான நிறத்தில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், அரசு விதிப்படி செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்த கூடாது. உணவகங்கள் இயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தும்போது உணவின் நிறம் மங்கிவிடுகிறது. இயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட மக்களின் மனநிலை அதை ஏற்க மறுக்கிறது. இப்படியான சூழலில் மக்களின் இந்த மாதிரியான மனநிலையை மாற்றுவது சவாலாக உள்ளது. இவ்வாறு அரசின் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் உணவு விநியோகஸ்தர்களுக்கும், உணவகங்களுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
வணிக ரீதியான சவால்கள்
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் கடன் சுழற்சி முறையில் தான் உணவு விநியோகஸ்தர்களிடம் பொருட்களை வாங்குகின்றன. உணவு விநியோகஸ்தர்களும் கடன் கொடுக்க தயாராக இருக்கும் நிலையிலும் கூட ஒரு சில உணவக உரிமையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணம் தருவதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர். மேலும், பல உணவகங்கள் நஷ்டமடைந்து திடீரென மூடப்படும்போது, விநியோகஸ்தர்களின் பல லட்சம் ரூபாய் பணம் முடங்கிவிடுகிறது. இதனால் விநியோகஸ்தர்களின் வணிகம் பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கின்றன.
இப்படியான வணிக ரீதியான சவால்களை தீர்ப்பதற்காகவே தான் HISWA (Hospilatity Industry Sppliers Welfare Association) என்ற அமைப்பைத் தொடங்கினோம். சிதறிக் கிடக்கும் விநியோகஸ்தர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்கவும், அரசுக்குத் தங்களின் கோரிக்கைகளைக் கொண்டு செல்லவும் இந்தப் புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்களின் ஆதிக்கம்
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், பல பெருநிறுவனங்கள் நேரடியாகச் சில்லறை வியாபாரிகளுக்கோ அல்லது நுகர்வோர்களுக்கோ பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளன (Direct-to-Consumer). மேலும், உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள், பாரம்பரிய விநியோகஸ்தர்களுக்கு ஒரு பொருளை ₹10-க்கு விற்றால், பெருமளவில் கொள்முதல் செய்யும் பெரு நிறுவனங்கள் அதே பொருளை ₹8-க்கு விற்கின்றனர். இதுபோன்று, பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் (E-commerce giants) பெருமளவில் தள்ளுபடிகளை வழங்கி சந்தையை ஆக்கிரமித்து வருவதால், பாரம்பரிய விநியோகஸ்தர்களின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் காரணமாக தற்போது நியாயமாக வியாபாரம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர விநியோகஸ்தர்கள் சந்தையை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு கீழ் பணியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. பெரு நிறுவனங்களுக்கும், உணவு விநியோகஸ்தர்களுக்கும் இடையேயான இந்தச் சமமற்ற போட்டியை எதிர்கொள்வது சங்கத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
அரசின் தலையீடு அவசியம்
தமிழகம் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தாலும் கூட, உணவு விநியோகஸ்தர்களின் சவால்களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. என்னதான் சங்கத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட தமிழ்நாடு அரசும் உணவு விநியோகஸ்தர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும். மேலும், பெரு நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும்.
தற்போது உணவு விநியோகஸ்தர்களுக்கு அரசு விதிக்கும் விதிகளை பெருநிறுவனங்களுக்கும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக கூறவேண்டும் என்றால், உணவுப் பாதுகாப்புத்துறை உணவகங்களை மட்டும் கடுமையாகக் கண்காணிக்கிறது. ஆனால், டெலிவரி செய்யும் நபர்கள் அணியும் உடைகள், அவர்கள் பயன்படுத்தும் பைகள் (Delivery Bags) மிகவும் அழுக்காக உள்ளன. டெலிவரி பைகளில் சைவ மற்றும் அசைவ உணவுகள் எவ்விதப் பிரிப்புமின்றி (Separation) ஒன்றாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இது பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறது. இது குறித்து அரசு எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை என்பது விநியோகஸ்தர்களின் முக்கியக் குற்றச்சாட்டாகும். ஆகவே, இப்படியான பொதுவான விதிகளை பெரு நிறுவனங்களுக்கு பின்பற்ற அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சலுகைகள் மற்றும் நிதிக்கான பரிமாற்றம்
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் பெருநிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நிதியால், அரசிடம் இருந்து சில சலுகைகளை பெற்றுக் கொள்கின்றன. உதாரணமாக முறையான ஆய்வுகள் இன்றி பெரு நிறுவனங்களுக்கு சில மாநில அரசுகள் அனுமதி வழங்குகிறது. இதனால் அங்கு பாரம்பரியமாக வியாபரம் செய்து வரும் உணவு விநியோகஸ்தர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இப்படியான பல்வேறு சவால்களை உணவு விநியோகஸ்தர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்று கருத்தாமல் அவர்களுடன் தொடர்புடைய சமூகத்தின் பிரச்சனையாக எண்ணி அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த செயல்பாடே எதிர்காலத் தீர்வு
உணவுப்பொருள் விநியோகத் துறை என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அது மக்களின் அன்றாட வாழ்வோடும், சுகாதாரத்தோடும் நேரடித் தொடர்புடைய ஒரு முக்கிய சேவையாகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கம், ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளின் பொறுப்பற்ற தன்மை, மற்றும் உணவகங்களின் கடன் நிலுவை போன்ற பல முனைகளில் சிறு மற்றும் நடுத்தர விநியோகஸ்தர்கள் இன்று கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சவால்களைத் தனிமனிதனாக எதிர்கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட விநியோகஸ்தர்கள், தற்போது ஒரு வலுவான கூட்டமைப்பாக ஒன்றிணைந்திருப்பது இத்துறைக்கு மிகவும் அவசியமான ஒரு நகர்வாகும். சுருக்கமாகச் சொன்னால், நுகர்வோருக்குத் தரமான உணவு கிடைப்பதையும், நடுத்தர விநியோகஸ்தர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய அரசு, உணவக உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய மூன்றும் ஒரு வெளிப்படையான புரிதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதே இத்துறையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு நிரந்தரத் தீர்வாகும்.
